கோவை: கோவை விமான நிலையத்தில் மலர் கொத்து விற்பனை செய்யும் தானியங்கி இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது Coimbatore Airport-க்கு வரும் பயணிகள் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்துகின்றனர். பல்வேறு ஊர்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கோவைக்கு வரும் உறவினர்களை, விருந்தினர்களை, அரசியல்வாதிகளை, வெற்றியாளர்களை மற்றும் தொழில்முனைவோர்களை வரவேற்கச் செல்வோர், அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து உபசரிப்பது வழக்கம்.
இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் வசதிக்காக கோவை விமான நிலைய வளாகத்திலேயே பூங்கொத்து விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதில் அசத்தல் என்னவென்றால், பூங்கொத்துகளை நமக்குத் தருவது ஒரு தானியங்கி இயந்திரம்.
இந்த தானியங்கி இயந்திரத்தில் உள்ள டிஜிட்டல் திரை மூலம், பயணிகள் தேவையான மலர் கொத்தை தேர்வு செய்து, அதற்குரிய தொகையை ஆன்லைனில் செலுத்தினால், அழகான பூங்கொத்தை நாம் பெற்றுக்கொள்ளலாம்.
மலர் கொத்துகள் ரூ.800 முதல் கிடைக்கின்றன. மேலும், ரூ.5,000 மற்றும் அதற்கும் அதிக விலையிலான மலர் கொத்துக்களையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்.
அவசரமான சூழ்நிலைகளில் மலர் கொத்து வாங்க முடியாதவர்களுக்கு இந்த தானியங்கி இயந்திரம் உதவியாக இருக்கும் என்பதால், இது பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வீடியோவை இங்கு காணலாம்:
அதே நேரத்தில், மலர் கொத்துக்கள் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், விலையை குறைத்தால் இன்னும் மகிழ்ச்சி என பயணிகள் தெரிவித்துள்ளனர்.