கோவை: கோவை வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்றும், அவரை சந்திப்பதைத் தான் தவிர்க்கவும் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றுவிட்டு சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார் முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது குறித்த முழு தகவல் இன்னும் கிடைக்கவில்லை. பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன்.
கோவையில் தங்கியுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க நேரம் எதுவும் கேட்கவில்லை. பிரிந்து கிடக்கின்ற அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்று தான் அமித்ஷா கூறி வருகிறார். அமித்ஷாவை சந்திக்காமல் நான் தவிர்க்கவில்லை.
எனது தரப்பிலிருந்து அ.தி.மு.க.வை இணைக்கத் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நடுநிலையாளர்கள் எங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நல்ல நண்பர். அவர் அ.தி.மு.க இணைய வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இவ்வாறு ஓ.பி.எஸ் கூறினார்.