கோவை: கோவையில் பல்வேறு பகுதிகளில் பைக்குகளை திருடிய பலே திருடன் பீளமேடு போலீசாரிடம் சிக்கியுள்ளான்.
கோவை மாநகர பிளமேடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட பல்வேறு பகுதிகளில் பைக் திருட்டு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, இன்று காலை 11 மணியளவில் சின்னியம்பாளையம் டீச்சர் காலனி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த ஒரு நபரை நிறுத்தி ஆவணங்களிய சோதனை செய்தனர்.
அப்போது அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். சுதாரித்த போலீசார் அந்த நபரிடம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அந்த நபர் இயக்கி வந்த பைக் பீளமேடு பகுதியில் திருடியது என்பதை ஒப்புகொண்ட அவர், தன் பெயர் அஜித்குமார் என்று தெரிவித்தார்.
அவர் மீது சந்தேகம் எழுந்ததால், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பீளமேடு மட்டுமல்லாது, சிங்காநல்லூர், இராமநாதபுரம் உள்ளிட்ட கோவை மாநகர பகுதிகளிலும் மற்றும் சூலூர், தாராபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளிலும் வளைத்து வளைத்து பைக்குகளை திருடியது தெரியவந்தது.
தொடர்ந்து அவர் திருடிய 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.