கோவை: கோவையில் முக்கிய இடங்களில் “ரூ” இலச்சினை கொண்ட எல்.இ.டி திரையில் தமிழ்நாடு பட்ஜெட் இன்று நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக முதன்முறையாக மாநில ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில் மத்திய அரசு அறிவித்துள்ள ரூபாய்க்கான இலச்சினைக்கு (லோகோ) பதிலாக தமிழக அரசு “ரூ” என்ற இலச்சினையைப் பயன்படுத்தியது.
இதற்கு பா.ஜ.க.வினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் தமிழ்நாடு பட்ஜெட் தமிழகம் முழுவதும் மாநகரங்கள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கோவையில், காந்திபுரம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் “ரூ” இலச்சினையுடன் கூடிய எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழக பட்ஜெட் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
பொது இடங்களில் உள்ள மக்கள் அங்கு பட்ஜெட்டை காணலாம் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.