கோவை: கோவையில் எம்.ஜி.ஆர் ஆத்மா சாந்தியடையவில்லை என்ற போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையைச் சேர்ந்த அ.தி.மு.க தொண்டர் ஜிம் சுகுமாரன். இவர் ரயில் நிலையம் எதிரே உள்ள சாலை தடுப்புச் சுவர்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.
அந்த போஸ்டரில், எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வை உருவாக்கினார். மக்களுக்காக உழைத்த தலைவர் எம்.ஜி.ஆர். ஆனால், இன்று அவர் உருவாக்கிய கட்சியில் பதவிக்காக சண்டை போடுகிறார்கள்.
கட்சி சின்னத்தை முடக்கவும் முயல்கிறார்கள். அத்திக்கடவு திட்ட விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இல்லாமல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது தவறானது.
அதேசமயம், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் இடையே உள்ள முரண்பாடுகளும் தொடர்கின்றன. இந்நிலையில், எம்ஜிஆர் ஆத்மா இன்னும் சாந்தியடையவில்லை. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் அவர் உண்மையான சாந்தி அடைவார்” என்று அந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது.

அ.தி.மு.க-வில் தொடர்ந்து பூசல்கள் எழுந்து வரும் நிலையில், தொண்டர் ஒருவர் இப்படியான போஸ்டரை ஒட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது அக்கட்சியினரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.