கோவையில் பா.ஜ.க அலுவலகம்… திறந்து வைத்தார் அமித்ஷா விண்ணைப் பிளக்கும் கோஷம்!

கோவை: பா.ஜ.க வின் கோவை மாவட்ட புதிய தலைமை அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திறந்து வைத்தர்.

பீளமேடு எல்லைத் தோட்டத்தில் பா.ஜ.க புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனைத் திறந்து வைக்க வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பா.ஜ.க. தொண்டர்கள் அவினாசி சாலையின் இரு புறமும் கூடி, மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விழா மேடைக்கு வந்த அமைச்சர் அமித்ஷாவுக்கு, பாரத் மாதா கி ஜெய், என்றும் வந்தேமாதரம் என்றும் விண்ணைப்பிளக்க கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தொடர்ந்து புதிய அலுவலகத்தை அமித்ஷா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:-

திருவண்ணாமலை, ராமநாதபுரம், கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் பா.ஜ.க அலுவலகம் திறக்கப்படுகிறது. ஒரு கட்சியின் அடிப்படை, அந்தக் கட்சிகளுக்கு அலுவலகங்கள் இருக்க வேண்டும் என்பது தான்.

தேசிய தலைவராக இருக்கும் போது அமித்ஷா, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கூட, மாவட்ட அலுவலகங்கள் கொடுப்போம் என்று கூறினார். அப்படி கூறிய அமித்ஷா கோவையில் கட்டப்பட்டுள்ள அலுவலகத்தைத் திறந்து வைக்க வந்து இருப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன்.

பா.ஜ.க எந்த நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதோ அதை எல்லாம் இன்று நரேந்திர மோடியும், அமித்ஷாவும் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்படும் என கூறியிருந்தோம் அதையும் செய்து காட்டி இருக்கிறோம், அதேபோல அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என கூறி இருந்தோம் அதையும் செய்து இருக்கிறோம். தேசத்திற்கு என்னவெல்லாம் சொல்கிறோமோ அதை அனைத்தையும் செய்வோம். என்றார்

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

கடந்த 2014ல் பாரதிய ஜனதா கட்சி ஒரு சிறிய அலுவலகத்தில் இயங்கி வந்தது. அந்த அலுவலகத்தைச் சொந்தமாக வழங்கி உதவி செய்த, பாபா பாலசுப்பிரமணியனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அமித்ஷா ஒவ்வொரு பகுதியிலும் பாரதிய ஜனதா அலுவலகம் இருக்க வேண்டும் என மனதில் நினைத்து இருந்தார். அந்த அலுவலகங்கள் ஒவ்வொரு பகுதிகளும் நம்முடைய கோயிலாக, வீடாக இருக்க வேண்டும்.

அருகில் வசிக்கும் அனைவரும் அந்த கோயிலுக்கு வீட்டிற்கு உரிமையோடு வரவேண்டும். அப்படிப்பட்ட கட்டிடமாக அது இருக்க வேண்டும். மாவட்டத் தலைவர் அறையிலிருந்து எல்லோருக்கும் தேவையான அறைகள் இதில் அமைக்கப்பட்டு உள்ளன.

வேகமாக வளர்கிறோம்

ஒவ்வொருவரும் படிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது. நாம் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறோம். அதனால் தான் நம் மீது அதிகமான கற்களையும் வீசுகிறார்கள்.

பாரதிய ஜனதா தொண்டர்கள் ஒவ்வொருவரும் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை 2026 இல் வேரோடு பிடுங்கி அகற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

முதலமைச்சர் பட்டப் பகலில் நாம் ஹிந்தியைத் திணிப்பதாக கபட நாடகம் போடுகிறார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் மூன்றாவது முறையாக காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நிறைவு பெற்றி இருக்கிறது. சிங்கப்பூர், அமெரிக்கா, என எங்கு சென்றாலும் பிரதமர் தமிழ் மொழி குறித்து ஏதாவது செய்து கொண்டு தான் இருக்கிறார்.

தமிழை நேசிக்கும் பிரதமர்

தமிழ் மொழியை நேசிக்கக் கூடிய பிரதமர் நமக்கு இருக்கிறார். மத்திய அமைச்சர் அமித்ஷா பதவிக்கு வந்த பிறகு 13 பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம் எனக் கொண்டு வந்தார். அப்படி இருக்கையில் இவர்கள் எப்படி ஹிந்தியைத் திணிப்பார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சரும் உண்மையில் தாய் மொழியைத் தான் திணித்துக் கொண்டு இருக்கிறார்கள். அமித்ஷா அவர்களுக்கு 133 திருக்குறள் அதிகாரம் பொறிக்கப்பட்ட பொன்னாடையைத் தான் இன்று வழங்கினோம்.

உங்களுடைய ஆட்சியில் தமிழ் கெட்டுவிட்டது. தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அனைவரும் ஆங்கில வழிக் கல்விக்குச் சென்று விட்டார்கள். முதல்வர் குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கும் சொந்த பள்ளியில் ஹிந்தி திணிக்கப்படுகிறது. இது மக்களுக்கு தெரிந்தவுடன் முதலமைச்சர் அடுத்ததாக தொகுதி மறு சீரமைப்பு என்ற பிரச்சனையை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்.

2026ல் தி.மு.க என்ன தான் குட்டிக்கரணம் போட்டாலும் வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி, ஒரு மனிதன் எந்த வேலையும் இல்லை என்றால் அந்த சமயத்தில் எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவான் என்பதற்கு உதாரணமாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், சுதாகர் ரெட்டி மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Recent News

Advertisment

Latest Articles