கோவை வெள்ளியங்கிரி மலை : யாரெல்லாம் செல்லக்கூடாது? என்னென்ன கட்டுப்பாடுகள், ஏற்பாடுகள்?

கோவை: கோவை வெள்ளியங்கிரி மலை ஏற்றம் மேற்கொள்வோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்து வனத்துறை மற்றும் அறநிலையத்துறை சார்பில் கூறப்பட்டுள்ள செய்தியை இந்த தொகுப்பில் காண்போம்.

நடப்பு மாத தொடக்கத்திலிருந்து கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

தினமும் 50,000 பக்தர்கள் வரை மலை ஏறி வருகின்றனர். வழக்கமாக மகா சிவராத்திரி வெள்ளியங்கிரி மலையில் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் 26ம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில்,

மகா சிவராத்திரி தினம் முதல் பவுர்ணமி வரை அதிக அளவிலான பக்தர்கள் மலையேறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், மகா சிவராத்திரியை முன்னிட்டு, கடந்தாண்டு மலையேறியவர்களில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தாண்டு, உயிரிழப்புகளைத் தடுக்க வனத்துறை மற்றும் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெள்ளியங்கிரியில் மூன்று மற்றும் ஆறாவது மலைகளில் முதலுதவி சிகிச்சை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இங்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
அவசர உதவிக்காக இரண்டு ஆம்புலன்ஸ்கள் இங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தண்ணீர் மற்றும் உணவு தேவைக்காக வனத்துறை சார்பில் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.

  • மூச்சுத் திணறல்
  • குறைந்த அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்
  • வலிப்பு நோய்
  • ஆஸ்துமா
  • நரம்புத் தளர்ச்சி
  • இருதய பாதிப்பு

போன்ற உடல் நலக் குறைவு உள்ளவர்கள் மலை ஏற வேண்டாம் என்று வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுவர அனுமதி இல்லை என்றும், பக்தர்களின் உடைமைகளைச் சோதனை செய்யும் போது பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் வனத்துறையினால் அதனை பறிமுதல் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை மனதில் கொண்டு, வெள்ளியங்கிரி மலைக்குச் செல்வோர் தங்களது பயணத்தைத் தொடர நியூஸ் கிளவுட்ஸ் கோயம்புத்தூர் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

மலையேற்றத்திற்குச் செல்லும் பக்தர்களுக்கு இச்செய்தியைப் பகிர்ந்து உதவலாம்.

Recent News

Advertisment

Latest Articles