கோவை: கோவையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் கோவையில் அவசர கதியில் தரையிறக்கப்பட்டது
கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை, டெல்லி, மும்பை ஆகிய உள்நாடுகளுக்கும், துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று இரவு 8.15 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு இண்டிகா விமானம் புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் விமானி மீண்டும் கோவை விமான நிலையத்திற்கு விமானத்தை திருப்பினார். எரிபொருளை எரிக்க சுமார் 1 மணி நேரம் விமானம் வானில் சுற்றிய பின்னர் தரையிறக்கப்பட்டது.
இதனால் விமானத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் நிம்மதி அடைந்தனர் . பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு அதே விமானம் இரவு 11.30 மணிக்கு ஹைதராபாத் புறப்பட்டு சென்றது.
பரபரப்பு
இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் இருந்து கோவை வந்த மற்றொரு விமானம் பயணிகளுடன் இரவு 11.41 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.
இரவில் சுமார் ஒரு மணி நேரம் விமானம் வானில் வட்டமடித்துக் கொண்டே இருந்ததால், கோவை விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதியில் நேரம் பரபரப்பு ஏற்பட்டது.