கோவை: கோவையில் லஞ்சம் வங்கிய மின்வாரிய ஊழியர்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
ரத்தினபுரியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், இவர் தனது புதிய வீடுகளுக்கு, 6 புதிய மின் இணைப்புகள் பெறுவதற்காக மின்வாரியத்திடம் முறையாக விண்ணப்பித்து, தேவையான கட்டணங்களைச் செலுத்தியிருந்தார்.
மேலும், ரத்தினபுரி மின்வாரிய அலுவலக போர்மேன் ஹாரூனிடம், தான் புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்திருப்பதாகவும், தனது வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குமாறும் கூறினார்.
அப்போது, ஹாரூன் ரூ.18,000 லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்றும், அப்போது தான் இணைப்பு கொடுக்க முடியும் என்றும் கேட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், லஞ்சம் வழங்க விருப்பமில்லாத ராஜ்குமார், இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
மறைந்திருந்த போலீசார்
இந்த தகவலின் அடிப்படையில், கூடுதல் துணை கண்காணிப்பாளர் திவ்யாவின் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரத்தினபுரி மின்வாரிய அலுவலகத்தில் சாதாரண உடையில் கண்காணித்து வந்தனர்.
அதன்படி, மின்வாரிய அலுவலகத்திற்கு ரூ.18,000 பணத்துடன் சென்றார் ராஜ்குமார். அங்கு போர்மேன் ஹாரூனை சந்தித்து, லஞ்சத் தொகையைக் கொடுத்தார்.
அதற்கு, பணத்தை கேங்க்மேன் உதயகுமாரிடம் ஒப்படைக்குமாறு ஹாரூன் கூறியுள்ளார். தொடர்ந்து லஞ்சப்பணம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஹாரூனையும், உதயகுமாரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
இருவரின் மீதும் லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் லஞ்சம் வாங்கி கைதான சம்பவம், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.