கோவை: கோவையில் காட்டெருமை தாக்கி வனக்காவலர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தடாகத்தை அடுத்த தோலம்பாளையம் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்திற்குள் கடந்த 10ம் தேதி ஒரு காட்டெருமை புகுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை சம்பவ இடத்திற்குச் சென்று காட்டெருமையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, காட்டெருமை தோலம்பாளையம் வனக்காவலர் அசோக் குமாரைத் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அசோக் குமார் சீலியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக வனக்காவலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காட்டெருமை தாக்கு வனக்காவலர் பலியான சம்பவம் வனத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.