கோவை: கோவைக்கான வரைவு மாஸ்டர் பிளான் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. ஐ.டி. துறை, தொழில்துறை, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என எல்லாவிதமான முக்கிய அம்சங்களும் கோவையில் தரமாக இருப்பதால் வெளியூர் மக்களும் கோவையைத் தேடி வருகின்றனர்.
வெளி மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் பலர் கோவையில் வந்து தங்கி, படிக்கின்றனர்.
அது என்ன மாஸ்டர் பிளான்?
கணக்கீட்டின்படி கோவை மாநகரின் மக்கள் தொகை 30 லட்சம். அதுமட்டுமின்றி 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கோவைக்கு வந்து செல்கின்றனர். இதன்படி, அடுத்த 15 ஆண்டுகளுக்குள் கோவையின் மக்கள் தொகை 70 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை இருக்கலாம் என்று கணிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் எதிர்கால வளர்ச்சிக்காக மாஸ்டர் பிளான் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முன்கூட்டியே திட்டமிட்ட மாஸ்டர் பிளான் மூலமாக ஒரு நகரின் வளர்ச்சியைத் தடைகள் இல்லாமல் முன்னெடுத்துச் செல்ல முடியும்.
கடந்த 1994ம் ஆண்டு முதல் கோவையில் மாஸ்டர் பிளான் திட்டம் பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மாஸ்டர் பிளானை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்குள் புதுப்பித்திருக்க வேண்டும்.
புதுப்பிக்கப்படவே இல்லை

அதன்படி, கடந்த 1999ம் ஆண்டு புதுப்பித்திருக்க வேண்டிய கோவை மாநகரின் மாஸ்டர் பிளான், 26 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை புதுப்பிக்கப்படவில்லை. இதனால் கோவை மாநகரின் வளர்ச்சி சற்று பின்தங்கியுள்ளது என்று கூறிவிட முடியும்.
கோவையைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள் ஆகியவை இணைந்து தங்களது நிறுவனத்திற்குத் தேவையான வசதிகளுக்காகவும், கோவையின் கட்டமைப்புகளையும் எல்லைகளையும் விரிவுபடுத்தவும் இந்த மாஸ்டர் பிளான் திட்டத்தை திருத்தி அமைக்குமாறு கோவை மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மாஸ்டர் பிளான் தயாரிப்பு
இதன் காரணமாக மாஸ்டர் பிளான் திட்டத்தைத் திருத்துவதற்கான பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. உள்ளூர் திட்டக் குழுமம், மாவட்ட நிர்வாகம், மற்றும் வெவ்வேறு அரசுத் துறையினருடன் இணைந்து கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை மாவட்ட நிர்வாகத்தால் கோவைக்கான மாஸ்டர் பிளான் வரைவு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மாஸ்டர் பிளான் 2041ம் ஆண்டில் கோவையில் இருக்கப்போகும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டது.
மாவட்டத்தின் எல்லையை விரிவாக்கம் செய்யும் நோக்கில் மொத்தம் 1531.53 சதுர கிலோமீட்டர் பரப்பளவு வரை இந்த வரைவு மாஸ்டர் பிளான் அறிக்கை உருவாக்கப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறுதி செய்யப்பட்ட பிளான்
இந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி தமிழக அரசு இந்த வரைவு பிளானை இறுதி செய்தது. இந்த வரைவு மாஸ்டர் பிளான் அறிக்கையை மக்கள் பார்க்க வசதியாக பிரத்தியேக மற்றும் தமிழக அரசின் அதிகாரப் பூர்வ இணையதளம் வாயிலாக வெளியிட்டனர்.
மாஸ்டர் பிளான் குறித்த கருத்துக்களும் வரவேற்கப்பட்டன. பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க கடந்த ஆண்டு மே மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டது.
3,500 பரிந்துரைகள்

இந்த பிளானில் திருத்தங்கள் வேண்டும் என்று, கோவையைச் சேர்ந்த கட்டுமான துறையினர், தொழில் துறையினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆட்சேபனைகள் தெரிவித்தனர். ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 3,500 பரிந்துரைகள் பெறப்பட்டதில், இறுதியாக 400 பரிந்துரைகளைத் தேர்வு செய்து அவற்றை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இறுதி கட்டத்துக்கு வந்த இந்த மாஸ்டர் பிளானில், ஐந்து உதவி இயக்குனர்கள் மற்றும் 12 நகர திட்டமிடுனர்கள் இணைந்து இந்த மாதம் 28ஆம் தேதி வரை பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “கோவைக்கான மாஸ்டர் பிளான் தயார் நிலையில் உள்ளது. இதில், மக்களிடம் பெறப்பட்ட பரிந்துரைகளை முடிந்த அளவு நிறைவேற்றியுள்ளோம். இந்த மாஸ்டர் பிளானில் தொழிற்சாலைகள் குறித்தும் குடியிருப்பு பகுதிகள் குறித்தும் இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மார்ச் 31ம் தேதிக்குள் கோவைக்கான வரைவு மாஸ்டர் பிளான் வெளியிடப்படும்.” என்றனர்.
இதனிடையே இறுதி செய்யப்பட்ட மாஸ்டர் பிளானை வெளியிட்டதும், அதில் கருத்துக் கூற மீண்டும் ஒருமுறை அவகாசம் வழங்க வேண்டும் என்று பொதுமக்களும் தொழில்துறையினரும் வலியுறுத்தியுள்ளனர்.