82 வயதில் என்னால் என்ன செய்ய முடியும் என்று நினைக்காதீர்கள் என்று லண்டனில் சிம்பொனி அரங்கேற்றி வந்த இளையராஜா பேசியுள்ளார்.
இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்பொனியை நேற்று அரங்கேற்றினார். ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனி எழுதி அரங்கேற்றி, தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தொடர்ந்து அவர் விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அனைவருக்கும் மிகவும் நன்றி. மிகவும் மகிழ்வான இதயத்தோடு, மலர்ந்த முகத்தோடு என்னை அனைவரும் வழியனுப்பினீர்கள். அதனால் தான், இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த இறைவன் எனக்கு அருள் புரிந்தார்.
இசையை எழுதிக்கொடுத்தால் வாசித்துவிடலாம். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி வாசித்தால் எப்படி இருக்கும்? அப்படி அனைவரையும் ஒரு சேர இசைக்க வைப்பதே இந்த நிகழ்வு. இது சாதாரண விஷயம் அல்ல.
இந்த சிம்பொனி 4 பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியும் முடியும் வரை யாரும் கைதட்டக்கூடாது என்பது விதி. சிம்பொனியை அரங்கேற்றும் போது விதிமுறைகளை மீறக்கூடாது. ஆனால், ஒவ்வொரு பகுதி முடியும் போதும், அங்கிருந்தவர்கள் கைதட்டினார்கள். பசிக்கும் போது தானே இன்று அடித்தால் நாளையா அழுவோம்?
அந்த நேரத்தில் மகிழ்ச்சியை அப்போதே கரகோஷங்கள் மூலம் தெரிவித்தனர். இது வல்லுநர்களால் பாராட்டப்பட்ட சிம்பொனியாக அமைந்துள்ளது.சிம்பொனியின் 2வது பகுதியில் நானும் ஒரு பாடலைப் பாடினேன். அந்த நாட்டினருடன் நான் பாடலைப் பாடியதும் மக்கள் வரவேற்பு கொடுத்தனர்.
இந்தியாவிற்கு பெருமை
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நிகழ்ச்சியாக அமைந்தது. முதல்வர் என்னை அரசு மரியாதையோடு வரவேற்றது நெஞ்சத்தை நெகிழவைக்கிறது. தமிழக மக்களின் அன்பான வரவேற்பு பெருமையாக உள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியை டவுன்லோடு செய்து கேட்கக்கூடாது. இதில், 80 வாத்தியக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து கருவிகளும் ஒலிப்பதிவு கருவியில் பதிவு செய்யப்படும் போது அப்படியே கேட்காது.

அக்டோபரில் துபாய், செப்டம்பரில் பாரிஸ் என அடுத்தடுத்து 13 தேசங்களில் சிம்பொனி நடைபெற உள்ளது. தமிழகர்கள் இல்லாத பகுதிக்கும் இந்த இசை செல்கிறது. இந்தியாவிலும் நடைபெறும். அப்போது அமைதியாக அமர்ந்து இசையை ரசிக்கலாம்.
நம் மக்களை இந்த இசையைக் கேட்க வைக்க வேண்டும். அமைதியோடு இருந்து ரசிக்க வேண்டும். இது தான் இசையில் உச்சகட்டமான விஷயம்.
என் மீது அன்பு வைத்து, தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். இசைக்கடவுள் என்கிறார்கள். எனக்கு என்னைப்பற்றி கவலை இல்லை. கடவுளை இளையராஜா அளவுக்கு கீழே இறக்கிவிட்டீர்களே என்று தோன்றுகிறது.
82 வயதில் என்னால் என்ன செய்ய முடியும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் நினைக்கும் அளவீடுகளுக்குள் நான் இல்லை.
பண்ணைபுரத்தில் இருந்து வெறும் காலில் வந்தேன். என்னுடைய காலில் தான் இப்போதும் நிற்கிறேன். இதை இளைஞர்கள் உணர வேண்டும். அவரவர் துறையில் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு இளையராஜா கூறினார்.