கோவை: கோவை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். வீடியோ கான்பிரன்சிங் மூலம் ராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் பா.ஜ.க அலுவலகங்களைத் திறந்து வைத்தார்.
பின்னர், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அமித்ஷா பேசியதாவது:
தமிழகத்தில் ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. கனிம வளக் கொள்ளை, லஞ்சம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தி.மு.க ஆட்சியில் அதிகம் நடைபெற்று வருகிறது.
புதுப்புது பிரச்னைகள்
இவற்றை மறைக்கவே புதிய பிரச்சினைகளை தி.மு.க.வினர் உருவாக்கி வருகின்றனர். புதிய கண்டுபிடிப்பாக தொகுதி மறுவரையால் பாராளுமன்றத்தில் மாநிலத்தின் எண்ணிக்கை குறையும் என பொய்யான தகவலைக் கூறி வருகின்றனர். இதற்காக தி.மு.க சார்பில் கூட்டம் நடைபெறுகிறது.
மக்கள் தொகை அடிப்படையிலும் விகிதாச்சார அடிப்படையிலும் தான் தொகுதி மருவரை செய்யப்படும் என பாராளுமன்றத்தில் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
இதனால் பாராளுமன்றத்தில் தென்மாநிலங்களுக்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். எந்த விதத்திலும் பாதிப்புகள் ஏற்படாது. ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்.
தமிழ்நாட்டில் வேறுருன்றியுள்ள தேசியத்திற்கு எதிரான சிந்தனைகள் வேரோடு பிடுங்கியெறிப்படும். தமிழ்நாட்டில் புதிய எழுச்சியை உருவாக்கும் ஆட்சியாக நம் ஆட்சி அமையும்.

தமிழ் மக்களின் வாழ்வியல், கலாசாரத்தை போற்றும் தலைவராக மோடி உள்ளார். இங்கு சட்டம் ஒழுங்கு கேவலமான நிலையில், சீரழிந்து காணப்படுகிறது.
தி.மு.க.வினர் புதிது புதிதாக தமிழகத்திற்கு பிரச்னைகளை உருவாக்குகிறார்கள். கடந்த 2004-2014 வரை 10 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் திட்டங்கள் மானியம் என்று ரூ.1.52 லட்சம் மக்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
பச்சைப் பொய்

மோடி அரசு நிதி தரவில்லை என்று பச்சைப் பொய் சொல்கிறார் ஸ்டாலின். மத்தியில் உங்கள் கூட்டணி ஆட்சியிலிருந்த போது தான் நீங்கள் உண்மையான துரோகத்தை மக்களுக்கு செய்தீர்கள்.
மெட்ரோ, பேரிடர் நிதி என்று ஏராளமான நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் நடைபெறும் அவலங்களை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லுங்கள்.
உள்ளிட்ட விஷயங்களை அமித்ஷா பேசினார்.
இதனையடுத்து, வெள்ளியங்கிரி பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மாலை 6 மணிக்கு மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்றார்.