Chennai: ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக 83 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக தங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பல அரசுகளும், நகரப்பகுதியில் மக்களுக்கு பட்டா வழங்குவதில் தயக்கம் காட்டிவந்தன. அதோடு, சட்டரீதியான பிரச்சனை நமக்கு வேண்டாம் என்றும் விலகி இருந்தன. இதனிடையே பட்டா இல்லாமல் வசிப்போருக்கு பட்டா வழங்க கேபினேட் மீட்டிங்கில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு!
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்” ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர்,
மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் – நகராட்சிகள் – மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய #CabinetMeeting-இல் ஒப்புதல் வழங்கியுள்ளோம்.
6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம். உங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு முதலமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின் அறிவிப்பின் மூலம் நீண்டகாலமாக நிலத்திற்கு போராடிக்கொண்டிருந்த மக்களின் கனவு நிறைவேறியுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள்ளாக இம்மக்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.