கோவை: கோவையில் அமைந்துள்ள அடுத்த சாடிவயல் யானைகள் முகாம் புனரமைக்கப்பட்டு வருகிறது. பல்வேறு வசதிகளுடன் விரைவில் இந்த யானைகள் முகாம் திறக்கப்படுகிறது.
கோவை மாவட்டம் பூலுவாம்பட்டி வனத்தில் கடந்த 2012ம் ஆண்டு சாடிவயல் யானைகள் முகாம் தற்காலிகமாக உருவாக்கப்பட்டது.
கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்ட உதவும் கும்கி யானைகள் சாடிவயல் யானைகள் முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன.
முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடந்த 2020ம் ஆண்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்குட்டி யானைகள் முகாமிற்கு இங்கிருந்த கும்கி யானைகள் கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே சாடிவயல் முகாமை புனரமைக்க ரூ.8 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த பணிகள் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகின்றன.
புனரமைப்பு
சுமார் 50 ஏக்கர் பரப்பளவில், 18 யானைகள் வரை தங்க வைக்கும் வகையில் இம்முகாம் புனரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கு யானைகளுக்குத் தேவையான பராமரிப்பு கூடங்கள், தண்ணீர் தொட்டிகள், யானைகள் குளிப்பதற்காக ஷவர்கள் , பாகன் தங்குவதற்கு அறைகள், சிறிய அளவிலான குட்டைகள், சோலார் மின்சார வேலி, சோலார் லைட்டுகள், சிசிடிவி கேமராக்கள், மேலும் இந்த பராமரிப்பு கூடத்தைச் சுற்றி அகழிகள் போன்ற பல்வேறு வசதிகளுடன் யானைகள் முகாம் அமைக்கப்பட்டு வருகிறது.
சாடிவயல் யானைகள் முகாம் விரைவில் கோவையில் மற்றொரு சுற்றுலாத்தலமாக மாற நிறைய வாய்ப்புள்ளது.

இதன் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில், விரைவில் இம்முகாம் திறக்கப்படும் என்று தமிழக வனத்துறை தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்தார்.