கோவை: அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பா.ஜ.க.வை திட்டுவதையே சிலர் நோக்கமாக வைத்துள்ளனர் என்று கோவையில் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பா.ஜ.க. இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கியுள்ளோம். பா.ஜ.க கூட்டணி வேண்டுமென்று அரசியல் கட்சிகள் தவமிருக்கும் சூழலை உருவாக்கியுள்ளோம்.
பா.ஜ.க. குறித்து நானும், அ.தி.மு.க. குறித்து எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி பற்றி தெளிவாகக் கூறியுள்ளோம். அ.தி.மு.க என்ற பெயரையே நான் எங்கும் எடுக்கவில்லை. தொலைக்காட்சி விவாதத்திற்காக சிலர் நான் கூறியதையும், இ.பி.எஸ் கூறியதையும் திரித்துக் கூறுகின்றனர்.
அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு பா.ஜ.க.வை திட்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாகப் பேசுவதில்லை. அவர்களுக்கு தி.மு.க ஜெயிக்க வேண்டும் என்பதே குறிக்கோள்.
எது போன்ற கூட்டணி வர வேண்டும் என்பதை அரசியல் விமர்சகர்களே முடிவு செய்கிறார்கள். அப்படி என்றால் நானும் எடப்பாடியும் எப்படி அதைப் பற்றித் தொடர்ந்து பேச முடியும்.
பத்திரிக்கையாளர்களாகிய உங்களுக்கு கள நிலவரம் தெரியும். ஆனால் விமர்சனம் என்ற பெயரில் அங்கு அமர்ந்து பேசுபவர்களுக்கு என்ன தெரியும்? ஏ.சி அறையில் அமர்ந்து கொண்டு பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதுகிறார்கள். அதைத்தவிர வேறு என்ன தெரியும் அவர்களுக்கு?
என்று கூறினார்.