கோவை: கோவையில் வெறிநாய்க்கடிக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இதனிடையே ராம் சந்தர் வெறி நாய்க்கடிக்கு உள்ளானார்.
முதலில் சிகிச்சை ஏதும் எடுக்காத நிலையில், பாதிப்பு அதிகமானதால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நாய்க்கடி சிகிச்சை வார்டில் வைத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இதனிடையே ராம் சந்தருக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் மருத்துவமனையில் வளாகத்திலிருந்த நோட்டீஸ் போர்டின் கண்ணாடியை உடைத்தார். அதிலிருந்து விழுந்த கண்ணாடித் துண்டுகளில் ஒன்றை எடுத்து தனது கழுத்தை அறுத்தார்.
அதிர்ச்சியடைந்த மருத்துவப் பணியாளர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தெரு நாய்த் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாய்கள் கருத்தடை மையத்தை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்து, மக்கள் உயிரைக் காக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.