தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்களும் நாகரிகமற்றவர்கள் என்று பேசிய மத்திய கல்வி அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, தமிழக எம்.பி. தமிழச்சி, தமிழகத்திற்கு உரிய கல்வி நிதியை விடுவிக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஆவேசமாக பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழகத்திற்கு மும்மொழிக் கொள்கை குறித்த புரிதல் இல்லை. பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் கூட இதனை ஆதரித்துவிட்டனர். தமிழ்நாட்டில் அரசியல் செய்கின்றனர். நாகரிகமற்றவர்கள்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே மத்திய அமைச்சரின் பேச்சை கண்டித்து தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்!
தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?
தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா?
NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?
நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! தர்மேந்திர பிரதானைப் போல நாக்பூரின் (ஆர்.எஸ்.எஸ்) சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல.
நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா? என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்
என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பேச்சுக்கு, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.