காதலர் தினம்: கோவையில் களைகட்டும் ரோஜாப் பூ விற்பனை

கோவை: காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் ரோஜா பூக்கள் வரத்து அதிகரித்து விற்பனை சூடு பிடித்துள்ளது.

காதலர் தினம் என்றவுடன், பச்சை நிறக் காம்பில் சிவப்பு நிறத்தில் காதலைத் தாங்கி நிற்கும் ரோஜாப் பூக்கள் பலரின் நினைவுக்கு வரும்.

காதலர் தினத்தில் தனது அன்பிற்குரியவர்களுக்கு ரோஜா பூங்கொத்துகளைப் பரிசாகக் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சிக் கடலில் திளைக்க வைப்பது காலங்காலமக காதலர்களின் கடமையாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம்.

அந்த அளவுக்கு காதலர் தினத்தன்று ரோஜாப் பூக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. சமீப நாட்களாக ரோஜாப் பூக்கள் கொடுப்பதற்கு பதிலாக பல்வேறு வகையான பரிசுப் பொருட்களை தங்கள் காதலுக்கு பரிசளிக்கத் தொடங்கியுள்ளது இன்றைய தலைமுறை.

இதனால் கோவையில் கடந்தாண்டு ரோஜாப் பூக்கள் விற்பனை மந்தமாகவே இருந்தது. வரத்தும் குறைவாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, உலகம் முழுவதும் நாளை மறுநாள் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு கோவைக்கு ரோஜாப் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.

நீலகிரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு மற்றும் மைசூர் போன்ற பகுதிகளிலிருந்து கோவைக்கு ரோஜா பூக்கள் வந்து குவிந்துள்ளன.

விலை

காதலர் தினம் என்பதால் வரத்து அதிகரித்திருந்தாலும் ரோஜாப் பூ விலை இரண்டு மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோவையில் சிவப்பு நிற பொக்கே ரோஜா பூ ஒன்று ரூ.50 முதல் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், எண்ணிக்கை, பேக்கிங், பிரத்தியேக டிசனைக்கு ஏற்ப பூ மார்க்கெட்டில் ரூ.100 முதல் ரூ.2000 வரை ரோஜாப் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கோவையிலிருந்து ரோஜாப் பூக்கள் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.

கடந்தாண்டைப் போல் மந்தமாக இல்லாமல், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தற்போது முதலே ரோஜாப் பூக்களை வாங்கி வருவதாக பூ மார்க்கெட் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்

Recent News

Advertisment

Latest Articles